வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(27.07.2019) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
தமிழர் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்து , அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுக்கும் தமிழ்க் கடவுளின் கோயிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஆகும் . ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையில் இருந்து 6 ஆம் நாள் கொடியேறி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முறையே 24 ஆம் நாள் , 25 ஆம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும் தீர்த்தத் திருவிழாவும் முக்கியமானவையாகும் .
செங்குந்தர் பரம்பரையும் கொடிச்சீலை மரபும்
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயக் கொடியேற்றத்தின் போது கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் நடைமுறையில் இன்றளவும் மரபு வழியான முறைமை பின்பற்றப்பட்டு வருகின்றது . முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட செங்குந்தர் மரபினைச் சேர்ந்தவர்களே கொடிக்கயிறையும் , கொடிச்சீலையையும் பரம்பரை பரம்பரையாக வழங்கி வருகின்றனர் .
ஏன் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது என ஆராய்ந்தால் சந்தான பாக்கியம் வேண்டி முருகனிடம் நேர்த்தி வைக்கப்பட்டதாகவும் , நேர்த்திக் கடனைத் தீர்க்கும் பொருட்டு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலையை வழங்கும் மரபு உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது . தற்போது நல்லூர்க் கந்தனுக்கு கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் செங்குந்தர் சந்ததியினர் , அம்மரபு தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட்டனர் .
ஒவ்வொரு வருடமும் 24 முழம் நீளம் கொண்ட புதுக் கொடிச்சீலையில் வேலும் , மயிலும் வரையப்பட்டு தயார் செய்யப்படுகின்றது . அதேபோன்று கொடிக்கயிறும் 24 முழம் நீளத்தில் தயார் செய்யப்படுகின்றது . செங்குந்தர் பரம்பரையினரின் முக்கிய தொழிலாக நெசவுத் தொழில் காணப்படுவதால் , அவர்களே கொடிச்சீலையை நெய்து நல்லூர்க் கந்தனுக்கு வழங்கி வருகின்றனர் . எனினும் தற்போது நெசவுத் தொழில் கைவிடப்பட்ட நிலையில் , புத்தம் புதிய துணியில் வேலும் , மயிலும் வரையப்பட்டு வழங்கப்படும் வழக்கம் நிலவுகின்றது .
செங்குந்தர் பரம்பரையினர் கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்குவது குறித்து ஓர் ஐதீகக் கதையும் உண்டு . தில்லையில் நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யும் பேறு பெற்றவர் உமாபதி சிவாச்சாரியார் . உச்சிக்காலப் பூசையின் பின்னர் அவர் நண்பகல் 12 மணிக்கே வீடு திரும்புவார் . வெயிலில் அவர் செல்வதை அவதானித்த மன்னர் , அவருக்கு சிவிகையை வழங்கினார் . சிவிகையில் சென்று வந்த உமாபதி சிவாச்சாரியாரை அவதானித்த பெண்ணாடகம் மறைஞான சம்பந்தர் , பட்டகட்டையில் பகல் குருடன் போகின்றான் என அவரது சீடர்களிடம் விளித்துள்ளார் .
அதனைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் அவரே தமது குருநாதர் என்பதனை உணர்ந்து அவரை வணங்க விரும்பி , சிவிகையில் இருந்து இறங்கினார் . சிவாச்சாரியார் தமக்கு ஊறு விளைவிக்கப் போகின்றார் என தவறாக நினைத்த மறைஞான சம்பந்தர் அங்கிருந்து ஓடினார் . அவரைத் தொடர்ந்து சிவாச்சாரியாரும் ஓட ஆரம்பித்தார் . இருவரும் ஓடிக் களைப்படைந்ததால் செங்குந்தர் தெருவில் இளைப்பாறியதுடன் , குடிப்பதற்கு ஏதாவது தருமாறு மறைஞான சம்பந்தர் கேட்டுள்ளார் . செங்குந்தர் கூழை வழங்க , அதனை மறைஞான சம்பந்தர் வாங்கி அருந்தினார் . அதன் போது அவரது வாயிலிருந்து வழிந்த கூழை உமாபதி சிவாச்சாரியார் ஏந்தி அருந்தினார் . இதனை அறிந்த தில்லை வாழ் அந்தணர்கள் மன்னனிடம் முறையிட உமாபதியார் தில்லையில் பூசை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது .
தில்லையில் கொடியேற்ற தினத்தன்று தில்லை வாழ் அந்தணர்கள் கொடியேற்றிய போது அது அரைக்கம்பத்தில் அறுந்து வீழ்ந்தது . தொடர்ந்து செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்றுவதே எனக்கு விருப்பம் என அசரீரி ஒலித்தது . இறைவனின் விருப்பத்திற்கு இணங்க செங்குந்தர் நெய்த சீலையை உமாபதி ஏற்ற , அது வழுவாமல் ஏறியது . அன்றிலிருந்து கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிற்றை செங்குந்தர் பரம்பரையினர் வழங்கி வருவதாக ஒரு ஐதீகக் கதையும் உண்டு .
நல்லூர்க் கந்தனுக்கு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் பேறு பெற்ற செங்குந்தர்கள் யாரென்று ஆராய்ந்தால் , சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வந்த ஓர் இனம் தான் செங்குந்தர் எனும் கைக்கோளர் .
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி பொருந்திய வேலை உடையவர் என்று பொருள்படும் . பண்டைக் காலத்தில் போர்களின் போது மன்னர்களின் பாதுகாப்பிற்காக ஈட்டி பொருந்திய வேலை சுழற்றுபவர்கள் என்பதனால் , இவர்கள் கைக்கோளர் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர் .
செங்குந்தர்கள் ஈட்டி மட்டுமல்லாது வாளும் பிடித்து போரிடக் கூடிய வல்லமை பொருந்தியவர்கள் . அதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அந்தரங்க படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர் . செங்குந்தர்கள் குறிஞ்சி நிலப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதனால் ஆதிகடவுள் முருகனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் . முருகன் தோன்றிய போது அவரது தாயான பார்வதியின் காற்சிலம்பில் இருந்து தோன்றிய வீரவாகு வழி வந்த வழித்தோன்றல்கள் செங்குந்தர்கள் எனப்படுகின்றது .
இவர்கள் தமிழகத்தின் சேலம் , ஆத்தூர் , தர்மபுரி , ஈரோடு , கோயம்புத்தூர் , ஆற்காடு , ஆரணி , காமக்கூர் , தேவிகாபுரம் , காஞ்சிபுரம் , ஜெயங்கொண்டபுரம் , திருமழபாடி , தஞ்சை , சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பரந்து வாழ்ந்து வந்துள்ளனர் . இன்றும் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களின் முக்கிய தொழிலாக நெசவு இருந்தாலும் , வணிகம் போன்ற பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் .
வாணிபம் செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த செங்குந்தர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியை அண்மித்த பகுதிகளில் செறிந்து வாழ்ந்துள்ளனர் . இன்றும் நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதிகள் , மட்டக்களப்பில் ஆரையம்பதி , தாமரைக்கேணி , கோட்டைக்கல்லாறு ஆகிய இடங்களிலும் , வடமராட்சியின் கரவெட்டியிலும் செங்குந்தர் பரம்பரையினர் வாழ்ந்து வருகின்றனர் .
பந்தற்கால்
நல்லூர் ஆலயத்தில் ஆடி ரோகினி நட்சத்திரத்தன்று பந்தற்கால் நாட்டப்படுவதுடன் , அன்றைய தினம் ஆலயத்தினால் கொடிச்சீலை செய்வோருக்கும் , கொடிச்சீலையை எடுத்துவரும் தேர்க் குடும்பத்தாருக்கும் முறையான அறிவிப்பு வழங்கப்படுகின்றது . கோயில் சிவாச்சாரியார்கள் இருவர் மற்றும் தேவஸ்தான பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரியமான முறையில் மாட்டு வண்டியில் சென்று கொடியேற்றத் திகதியை குறித்த இரண்டு குடும்பத்தினருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றனர் . கோயில் தேவஸ்தானம் சார்பில் குறித்த இரண்டு வீடுகளுக்கு மாத்திரமே உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்படுவதால் , அவர்கள் அன்றைய தினத்தில் மிகவும் பக்திபூர்வமாக விரதமிருந்து , கோயில் தேவஸ்தானத்தைச் சார்ந்தவர்களை மங்கலகரமாகவும் கலாசாரமாகவும் வரவேற்கும் மரபு உண்டு . அப்பண்டைய மரபு தற்போதும் பின்பற்றப்படுவது சிறப்பானதாகும் . அன்று கோயிலைச் சுற்றி வெள்ளை - சிவப்புத்திரை கட்டப்படும் . இது மகோற்சவ காலங்களில் கோயிலின் பக்தி எல்லையைக் குறிப்பதுடன் , நல்லூரான் வீதி எங்கும் சிவன் - சக்தி ரூபமாகக் காட்சியளிக்கும் .
நன்றி - நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் நூல்(2016)
உமாச்சந்திரா பிரகாஷ்
COMMENTS